ஊழல்கள் தொடர்பில் உடனடி விசாரணை – டக்ளஸ் தேவானந்தா

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் மன்றங்களில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் உடனடி விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து, ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 40 மன்றங்களில் தமது கட்சி போட்டியிடுவதாகவும், தேர்தலில் வெற்றி பெற்றதும் ஏற்கனவே இடம்பெற்றுள்ள ஊழல்கள் தொடர்பில் உடனடி விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்பதுடன், ஊழலற்ற உள்ளூராட்சி மன்றச் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக தமது கட்சிக்கொள்கையை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாகவும், தமது கட்சிக் கொள்கையாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கூட்டு அரசில் தாம் பங்கெடுத்திருந்தாலும் அந்த அரசின் விஞ்ஞாபனத்தை தாம் ஒருபோதும் மக்களிடம் கொண்டு சென்றதில்லை. தமது கட்சியின் கொள்கையைத்தான் மக்களிடம் கொண்டு சென்று வாக்குகளைக் கேட்டு, அதில் வெற்றி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 40 சபைகளிலும், பெண்களுக்கு 36 வீத பிரதிநிதித்துவத்தைத் தமது கட்சி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இங்குள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயநலன்களை முன்னிறுத்தியே தேர்தல் கூட்டுக்களை வைத்துள்ளனர். இவர்கள் மக்கள் நலன் சார்ந்த கூட்டமாக இல்லை. உசுப்பேற்றும் சூடேற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏமாற்று வித்தைகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. பல நாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் என்பதைப் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இன்று மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கின்றார்கள் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த சபைகளை வென்றெடுக்கும் பட்சத்தில் கடந்தகால ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கப்படும் எனவும், வட்டாரரீதியில் இனங்காணப்படும் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் தமது ஐக்கியத்தை வெளியுலகத்திற்கு காட்ட வேண்டுமென்று தமிழ்த் தலைமைகள் கூறி மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றவர்கள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதுடன் தாம் முன்வைத்த கொள்கைகளில் அவர்களுக்கு நம்பிக்கையாக இருக்கவுமில்லை. நடைமுறையில் அதை அணுகவுமில்லை.

இன்று மக்கள் மாற்றுத் தலைமையை விரும்புவதான உணர்வும் தேவைப்பாடும் உள்ளதை நன்கறிந்துள்ள நிலையில், தாம் நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம் என்பதையும் மக்களுடனான சந்திப்புக்களின் போது மக்களே சாட்சி கூறுகின்றனர்.

எனவே இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமது கொள்கை நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு மக்கள் எமக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் என்றே நம்புவதாகவும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு