பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

முறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் தலைவர்களால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான கூட்டம் நேற்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் அனைத்துத் தலைவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை நாளை நடைபெறவுள்ள விஷேட நாடாளுமன்ற அமர்வு குறித்து இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் கட்சி தலைவர்களின் விஷேட கூட்டம் இடம்பெறவுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவிருந்த போதிலும், சர்ச்சைக்குரிய பிணைமுறி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து விவாதம் மேற்கொள்ள நாடாளுமன்றத்தை முன்னதாகவே கூட்டுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் ஜே.வி.பி என்பன சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், பிணை முறி தொடர்பான இறுதி அறிக்கை தொடர்பில் வாதிக்க உடன் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கமைவாக, நாளைய தினம் விஷேட நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு