சுமந்திரன் பொய் கூறுகிறார் – குற்றஞ்சாட்டுகிறார் கஜேந்திரகுமார்

ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றதென புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை மேற்கோள்காட்டி எம்.ஏ.சுமந்திரன் கூறுவது அப்பட்டமான பொய்யென தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதுடன், அரசியல் அமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களுக்கான பல விடயங்கள் உள்ளடங்கியிருப்பதாக பல்வேறு விதமான பொய்பிரசாரங்களை சுமந்திரன் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக ஒற்றையாட்சி என்ற சொல் நாட்டிற்குப் பொருத்தமில்லை என்பதால் அதனை நீக்கியுள்ளதாக கூறுகின்றார். அது அப்பட்டமான பொய்யாகும். ஒற்றையாட்சி நாட்டிற்குப் பொருத்தமில்லையென எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஆங்கிலத்தில் இருக்கின்ற யுனிற்றரி ஸ்டேற் முறைமை, இந்த நாட்டுக்கு பொருத்தமில்லை என்று தான் சொல்லப்பட்டிருக்கின்றதே தவிர, ஒற்றையாட்சி முறைமை இந்த நாட்டுக்குப் பொருத்தமில்லை என்று எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. பிரித்தானியா ஒற்றையாட்சி நாடாக இருந்தும், பிரிந்து செல்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதே யுனிற்றரி ஸ்டேட் என்ற ஆங்கிலப்பதமும் பொருத்தமில்லை எனக் குறிப்பிடப்படுவதற்கு காரணமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அறிக்கையில் முதலாவது பக்கத்தில் முதலாவது சரத்திலேயே நாட்டின் இறைமை பிரிக்கப்பட முடியாதென சொல்லப்பட்டிருக்கின்றது. நீண்டகால யுத்தம் முடிவடைந்த பின்னர் கொண்டுவரப்படவுள்ள இந்த அரசியல் அமைப்பானது மேலும் இறுக்கமாக இருக்க வேண்டுமென்றே தென்னிலங்கை விரும்புவதாக கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அறிக்கையை தமிழ் மக்கள் முழுமையாகப் படித்திருப்பார்களெனக் கருத முடியாது என்றும், அந்த நம்பிக்கையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு