தமிழர்கள் கௌரவத்துடன் வாழ வேண்டும்

எமது மக்கள் தமது சொந்த நிலங்களில் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழவேண்டும் என்பதே தமது நிலைப்பாடென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, உதயநகரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், ஏனைய சக தமிழ்க் கட்சிகளைப் பார்க்கிலும் தாம் அரசியல் நிலைப்பாடுகளில் பல்வேறு மாற்றங்களையும் கொள்கைகளையும் கொண்டிருப்பதாகவும், அவை யாவும் எமது மக்களின் நலன்சார்ந்தே கடந்தகாலங்களில் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் எதிர்காலங்களிலும் அவ்வாறே முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து 7 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள போதிலும் எமது மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் மீள்குடியேறாமல் இற்றைவரை நலன்புரி முகாம்களிலும் உறவினர் நண்பர்களது வீடுகளிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

அந்தவகையில், எமது மக்கள் தத்தமது சொந்த நிலங்களில் சுய மரியாதையுடனும் கௌரவத்துடனும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். அந்த நல்ல தருணத்திற்காக தாம் எப்போதும் அர்ப்பணிப்போடும் அக்கறையோடும் உழைத்து வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதனிடையே நல்லாட்சியைக் கொண்டு வந்தவர்கள் தாமே என்றும் மக்களின் பல பிரச்சினைகளுக்கு தாம் உரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவோம் என்றும் கூறியே போலித் தேசியவாதம் பேசியவர்கள் இன்று மௌனித்து இருக்கின்றார்கள். அவர்களது உணர்ச்சிப் பேச்சுக்களும் உசுப்பேத்தல்களும் எமது மக்களுக்கு ஒருபோதும் தீர்வுகளைப் பெற்றுத்தரப் போவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா, எமது மக்கள் நம்பிக்கையே வாழ்க்கை என்ற அடிப்படையில் எமது கட்சியை நம்பி வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்களேயானால் நிச்சயம் உங்கள் கனவுகளை நாம் நனவாக்குவோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு