போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைக்கு முஸ்தீபு

காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பலரை, சட்ட நடவடிக்கைக்குட்படுத்த முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 22 ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியை கடற்படை முகாமுக்கு சுவீகரிப்பு செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து, பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, நில அளவையாளர்களை வெளியேறக் கோரி வட்டுவாகல் பாலத்தினூடான போக்குவரத்தை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தியமை, அரச ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, பொதுமக்களின் பாவனைக்கான வீதியில் இடையூறு விளைவித்தமை, கடமையில் இருந்த அரச ஊழியர் மீதான அச்சுறுத்தல், வீதியால் போக்குவரத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அச்சத்துக்குள்ளாக்கியமை, அரச வாகனத்தை அடித்து சேதப்படுத்தியமை, சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடியமை போன்ற குற்றங்களின் கீழ் வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பலர் மீது சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு