சிரியாவில் உக்கிரமடையும் போர்

சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி கிழக்கு கோட்டா பகுதியில் அரசாங்க படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரிய ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிக் குழுவினர் சிரியாவில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

அவற்றை மீட்கவும், கிளர்ச்சியாளர்களை அழிக்கவும் ரஷ்ய நாட்டு படைகளின் துணையுடன் சிரியா இராணுவம் கடும் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில், உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரை ஒரு மாதத்துக்கு தற்காலிக போர்நிறுத்தம் ரஷ்யாவினால் அறிவிக்கப்பட்ட போதிலும், போர் நிறுத்த காலப்பகுதியில் நேற்று கிழக்கு கோட்டா பகுதியில் சிரிய அரச படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் 45 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன், துருக்கி தலைநகர் அங்காராவிலுள்ள அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ள அதேவேளை, தூதரகத்திற்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

துருக்கியில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமென அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெச்சரிக்கையான இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சிரியாவில் தற்போது இடம்பெற்றுவரும் கடுமையான மோதல்கள் காரணமாக துருக்கியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு