காணாமற் போதல் தொடர்பான சட்டமூலமொன்று நிறைவேற்றம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பலவந்தமாக காணாமல் போதல்களில் இருந்து அனைத்துத் தரப்பினரையும் பாதுகாக்கும் சர்வதேச சாசன சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 53 வாக்குகளும், எதிராக 16 வாக்குகளும் பிரயோகிக்கப்பட்டன. பலவந்தமாக காணாமல் போதல்களில் இருந்து அனைத்துத் தரப்பினரையும் பாதுகாக்கும் சர்வதேச சாசன சட்டமூலத்தை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன முன்வைத்தார்.

சட்டமூலத்தை முன்வைத்து உரையாற்றிய அமைச்சர், 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி இலங்கை காணாமல் போதல்களில் இருந்து பாதுகாப்பு வழங்கும் சர்வதேச சாசனத்தை ஏற்றுக் கொண்டு, 2016ஆம் ஆண்டு அதற்கு அனுமதியளித்ததன் அடிப்படையில், அந்த சாசனத்தை இலங்கை சட்டத்திட்டங்களுக்கு உள்வாங்கும் நோக்கில் இந்த சட்டமூலம் முன்வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சட்டமூலம் காணாமல் போகச் செய்வதை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்படுகின்ற சட்டமாகும். அத்துடன் இது இலங்கையின் சட்டத்திட்டங்களை பலப்படுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.