துஷ்பிரயோக வழக்கு: குற்றவாளிக்கு கடூழிய சிறை

யாழில், 16 வயதுக்குட்பட்ட சிறுமியை கடத்தி சென்று வன்புணர்வுக்குட்படுத்திய இளைஞனுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

அதேவேளை, குறித்த குற்றவாளிக்கு உதவிய குற்றச்சாட்டில் அவரது நண்பர் ஒருவருக்கு 05 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை தீர்ப்பளித்துள்ளார்.

வடமராட்சி, வல்வெட்டித்துறையில் 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13 வயதுச் சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் அப்போது 22 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று நிறைவில் சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், வழக்குக் கோவைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டன.

முதலாவது சந்தேநபர் மீது கடத்தல் மற்றும் வன்புணர்வுக் குற்றச்சாட்டும் இரண்டாவது சந்தேகநபர் மீது கடத்தல் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு சட்ட மா அதிபரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று குறித்த வழக்கு தீர்ப்புக்காக எடுத்து கொள்ளப்பட்டது.

அதன்போது சந்தேகநபர்கள் இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொள்வதாகவும், தமது குற்றத்துக்காக அவர்கள் தற்போது மனம் வருந்துவதாகவும், அவர்கள் இருவரினதும் குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டு குறைந்தபட்ச தண்டனையை வழங்குமாறு மன்றிடம் கோருவதாக எதிரிகள் தரப்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கருணை விண்ணப்பம் செய்துள்ளார்.

எதிரிகள் குற்றத்தை ஏற்றுக்கொண்டமையால் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு பெற்றுக்கொடுக்க மன்று உத்தரவிட வேண்டுமென அரச சட்டத்தரணி சுகந்தி கந்தசாமி மன்றில் விண்ணப்பம் செய்ததைத் தொடர்ந்து, நீதிபதி தனது தீர்ப்பில், குற்றவாளிகள் இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். முதலாவது எதிரி சிறுமியைக் கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், இரண்டு குற்றங்களுக்காகவும் முதலாவது எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.

அத்துடன், முதலாவது எதிரி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்க வேண்டும். அதனை வழங்கத் தவறின் 02 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும், தண்டமாக 5 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் எனவும், அதனை செலுத்தத் தவறின் ஒரு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது எதிரி, சிறுமியைக் கடத்திச் செல்ல முதலாவது எதிரிக்கு துணை நின்றுள்ளார். அதற்கு அவருக்கு 02 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அந்தத் தண்டனை 05 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுவதுடன், 05 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்த வேண்டும் எனவும், அதனைச் செலுத்தத் தவறின் ஒரு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி தண்டனைத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு