முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் தொழிலுக்கு சென்ற சிலாபத்தினை சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை திரும்பி வராத நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.
12ஆம் திகதி அதிகாலை முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற நிலையில், காணாமற் போயுள்ளனர்.
எனினும், இவர்கள் 12ஆம் திகதி நண்பகல் கரை திரும்புவதாக தெரிவித்துள்ள போதும், கரை திரும்பாத நிலையில் மீனவர்களை காணவில்லையென நேற்று (13) காலை நாயாற்று பகுதியினை சேர்ந்த மீனவ படகுகள் காணாமல்போன மீனவரின் படகினை தேடியும் இதுவரை கண்டுபிடிக்காத நிலையில் கரை திரும்பியுள்ளன.
இந்த மீனவர்களின் படகு 40 குதிரைவலுக் கொண்டது என்றும் படகு கடலில் மூழ்கி இருக்கலாம் என்றும், நேற்று காலை எரிபொருள் நிரப்பும் கான் ஒன்று குறித்த பகுதிக்கு கரையொதுங்கியுள்ளதையும் நாயாற்று வாடியிலுள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊடாக, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மூலம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு மீனவர்களைத் தேடுவதற்கு விமானப்படையின் உதவியை கோரியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.