அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் – சுமந்திரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகள் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹ{சைன் இலங்கைத் தொடர்பில் வெளியிடும் அறிக்கைக்கு அமெரிக்கா தமது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துமென தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் அதற்கு புறம்பாக நடைபெறும் கூட்டத்தொடர்களில் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்றுவரும் நிலையில், இந்தக் கூட்டங்களில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் சுமந்திரன் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய செயற்படவில்லை என்பதையும், பொறுப்புக்கூறலில் இருந்து விலகிச் செல்லும் போக்கை கடைப்பிடிப்பதை அவதானிக்கக் கூடியதாக இருப்பதையும் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் வலியுறுத்தியதாகவும், இந்தக் கூற்றுக்கு சாதகமான பதிலை ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன், அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி உள்ளிட்டவர்கள் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இன்றைய தினம் மனித உரிமைகள் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹ{சைன் இலங்கைத் தொடர்பில் வெளியிடும் அறிக்கைக்கு மறுமொழியாக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டுமென தாம் அமெரிக்காவின் ஜெனீவாவிற்கான அதிகாரி கெலி கரியயை சந்தித்த சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுத்ததாகவும், அறிக்கையில் ஆணையாளர் முன்வைக்கும் புதிய பரிந்துரைகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பிலும் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு குறித்த அதிகாரி சாதகமான பதிலை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு