எதிர்காலத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு அறிவிக்கும் முகமாக விளம்பரங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்ததுடன், கடந்த அரசாங்கம் தாம் மேற்கொள்ளும் அனைத்து வகையான வேலைத்திட்டங்களுக்கும் பாரியளவிலான விளம்பரங்களை மேற்கொண்டிருந்ததாகவும், வீதிக்கு வீதி விளம்பர பதாகை, சுவரொட்டிகள் மற்றும் ஊடகங்கள் ஊடாக விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், நல்லாட்சி அரசாங்கம் அவ்வாறு எமது வேலைத்திட்டங்கள் தொடர்பில் எவ்வித விளம்பரங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது தற்போது நல்லாட்சி அரசாங்கத்திற்கு பாரியளவில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் காரணமாக அரசாங்கத்தை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின் விளம்பரப்படுத்தல் அத்தியாவசியமாகின்றது என்பதால், எதிர்காலத்தில் அரசின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கும் முகமாக விளம்பரப்படுத்தல்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.