தேயிலைத் தூளுடன் சீனி கலக்கும் மோசடி: விசாரணைகள் ஆரம்பம்

தேயிலைத் தூளுடன் சீனியைக் கலந்து விற்பனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நாடளாவிய ரீதியில், 53 தேயிலைத் தொழிற்சாலைகள் இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், இலங்கைத் தேயிலை சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், 80 தொழிற்சாலைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 53 தொழிற்சாலைகளில், தேயிலைத் தூளில் சீனி கலப்படம் செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தேயிலைப் பொதிகளின் எடையை அதிகரிக்கும் நோக்கிலேயே, இவ்வாறு தேயிலைத் தூளில் சீனி கலப்படம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள தேயிலைச் சபை, இத்தகைய மோசடி நடவடிக்கைகள் காரணமாக, சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு அபகீர்த்தி ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

சீனி கலப்படம் செய்யப்படுவதால், தேயிலைத்தூள் ஈரத்தன்மையுடன் காணப்படுவதாகவும் காலாவதித் திகதிக்கு முன்பதாகவே, தேயிலைத் தூள்களில் பூஞ்சனம் பிடிப்பதாகவும் தேயிலை சபை தெரிவித்துள்ளது.

குறித்த 53 தொழிற்சாலைகளுக்கும் எச்சரிக்கை விடவுள்ளதாக தெரிவித்துள்ள பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க, மேற்படி தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுமாயின், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு