இலங்கை – பாகிஸ்தான் இணைந்து செயற்படும்

நீண்டகாலமாக பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமிடையில் இருந்துவரும் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி, பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கு சகோதர நாடுகள் என்ற வகையில் இணைந்து பயணிக்க இரு நாடுகளின் தலைவர்களும் உறுதியளித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்னூன் ஹ{சைனுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்ற போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் நகரிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்துக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாகிஸ்தானிய ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றதுடன், தலைவர்களுக்கிடையிலான சுமுகமான சந்திப்பைத் தொடர்ந்து இருதரப்பு கலந்துரையாடல் ஆரம்பமானது.

இலங்கைக்கு வழங்கும் புலமைப்பரிசில்கள் மற்றும் பயிற்சி சந்தர்ப்பங்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தானிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் அச்சந்தர்ப்பங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

உலக பயங்கரவாதத்துக்கெதிராக அணிசேர வேண்டியதன் அவசியம் குறித்து இரு நாடுகளினதும் தலைவர்கள் விரிவாகக் கலந்துரையாடியதுடன், கடந்த யுத்த காலத்தில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிய உதவிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டியுள்ளதுடன், ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர்களின் போது, இலங்கைக்காக பாகிஸ்தான் வழங்கிவரும் ஒத்துழைப்பையும் பாராட்டியுள்ளார்.

இலங்கைக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் உதவுவதற்கு பாகிஸ்தான் தயார் என்றும் பாகிஸ்தானை சகோதர நாடாக ஏற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதியிடம் தெரிவித்த பாகிஸ்தானிய ஜனாதிபதி, அடுத்த சார்க் விழாவை பாகிஸ்தானில் நடத்துவதற்கு இலங்கை உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் இருந்துவரும் வெளிநாட்டு, பாதுகாப்பு, வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை மேலும் உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் இந்தப் பயணம் உதவியுள்ளதாக பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்னூன் ஹ{சைன் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு