ஈ.பி.டி.பி தொடர்பில் மாவையின் கருத்து

ஈ.பி.டி.பியை ஒரு காலத்திலும் நான் விமர்சிக்கவில்லை. அவர்கள் ஒட்டுக் குழு கூறவுமில்லை. ஈ.பி.டி.பியுடன் நாங்கள் கூட்டுச் சேரவும் இல்லையென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளுராட்சி சபைகளில், ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் அச்சபைகளின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, தங்களது உறுப்பினர்களை மாநகர சபை மேயராகவும், நகர மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளராகவும் கூட்டமைப்பு நியமித்துவரும் நிலையில், கடந்த காலங்களில் ஈ.பி.டி.பியை விமர்சித்து வந்த போதிலும், தற்போது அவர்களுடன் சேர்ந்து ஆட்சிமையத்து வருவது தொடர்பாக, ஊடகவியலாளர்கள் மாவை சேனாதிராசாவிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நீங்கள் கூறியது போன்று நான் ஒரு காலமும் பேசவில்லை. வேறு யாராவது பேசியிருக்கலாமெனத் தெரிவித்ததுடன், இந்தத் தேர்தல்முறை மிகவும் ஒரு தவறான விளைவை ஏற்படுத்தியிருக்கின்றது. இதில் 60 வீதம் வட்டாரத்திலும் 40 வீதம் விகிதாசாரத்திலும் என்று சட்டம் கூறப்பட்டாலும், 60 வீதம் விகிதாசாரத்தில் இருந்து தெரிவு செய்யப்படுகின்ற தவறான நடைமுறை இதில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 56 சபைகளில் கூட்டமைப்பு போட்டியிட்டதில் 40 சபைகளில் தனித்த பெரும்பான்மை கொண்ட கட்சியாக கூட்டமைப்பு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நாங்கள் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டோம். ஆனாலும் அதிலும் சில பின்னடைவுகள் எங்களுக்கு இருக்கத்தான் செய்கின்றன.

இந்த தேர்தல் முறையிலும் சரி, நடைமுறையிலும் சரி பெரும்பான்மைத்துவத்தை நாங்கள் பெற்றாலும், எதிர்காலத்தில் அந்தச் சபை நிர்வாகத்தை சரியான முறையில் நடாத்தவதுக்கு எல்லோருக்கும் நாங்கள் ஒரு அழைப்பை விட்டிருந்தோம். அதாவது இங்கு எந்தெந்த இடங்களில் எந்தக் கட்சி கூடிய பெரும்பான்மையைப் பெற்றதோ அந்தந்த இடங்களில் ஆட்சிமையப்பதுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று பகிரங்கமாக கேட்டிருந்தோம். அந்தவகையில், டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்டு பேசியிருந்தேன். அதற்காக நாங்கள் கூட்டுச் சேர்ந்ததாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு