த.வி.கூ உறுப்பினர்களுக்கு சிக்கல்

வலிகாமம் தெற்கு மற்றும் திருக்கோவில் பிரதேச சபைகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டதால் அவர்கள் நீக்கப்படவுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தமிழரசு கட்சிக்கு வாக்களித்தமையால் அவர்கள் நீக்கப்பட்டு, புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் இன்றைய அவலநிலைக்கு தமிழரசுக் கட்சி உள்ளடங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணமென தெரிவித்துள்ள வீ. ஆனந்தசங்கரி, அதற்கு மாற்று அணியாக உதய சூரியன் சின்னத்தில் பல அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கட்சியின் கோட்பாடுகளை அறிந்தும் உள்ளூராட்சி மன்றங்களில் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், நடைபெறவுள்ள ஏனைய உள்ளூராட்சி மன்ற தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகளிலும் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாமென கோரியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி, இந்த அறிவிப்பை மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி 1447 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களை வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் கைப்பற்றிய அதேவேளை, திருக்கோவில் பிரதேச சபைக்காக போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி 792 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை மாத்திரம் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு