இலங்கையில் நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத அமைப்பு ஒன்றையும் அதன் காரணமாக ஏற்பட்ட யுத்தத்தையும் கருத்திற்கொண்டு இலங்கையில் முன்னுரிமையளிக்கப்பட வேண்டிய ஒரு துறையாக நிதி குற்றம் தொடர்பாக ஆபத்து இனங்காணப்பட்டுள்ளதாகவும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு இணைவாக லண்டன் மென்ஷன் இல்லத்தில் இடம்பெற்ற நிதிசார் ஒழுங்குவிதிகள் பற்றிய பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அந்தக் காலத்தில் தேவையான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, தற்போதும் நிதிசார் குற்றங்களைத் தவிர்க்கும் நோக்கில் அமுலிலுள்ள சட்டதிட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கடந்த சில வருடங்களில் நிதிசார் குற்றச்செயல்கள் அதிகரித்திருந்தமையால், சர்வதேச நிதி நடவடிக்கைகளில் மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், இது அனைத்து மக்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான மறைமுக விளைவுகள் வளர்முக நாடுகளின் வங்கி நடவடிக்கைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும், உலக நிதி வலையமைப்பின் மூலம் வங்கிகளின் செயற்பாடு சீர்குலையும் ஆபத்து இருப்பதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
2018ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிதி வசதிகளைக் கொண்டு இலங்கையின் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது இலங்கை அரசாங்கத்தின் ஒரு பிரதான நோக்கம் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.