சில ஊடகங்களின் செயற்பாடு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு தடையாக அமைகிறது

குறிப்பிட்ட சில ஊடகங்கள் அரசியல் இலாபம் கருதி, உண்மையை மூடி மறைத்து பொய்யை முன்வைத்து வருவது, தாய் நாட்டின் எதிர்காலப் பயணத்துக்குத் தடையாக அமைந்துள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

லண்டனில் வசிக்கும் இலங்கையர்களை நேற்று சந்தித்துக் கலந்துரையாடும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன், தாய் நாட்டின் உண்மை நிலைமையைக் கருத்திற்கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் பங்கேற்குமாறும் லண்டன் வாழ் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்விமான்கள், வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் ஸ்தாபித்து, நாட்டை அபிவிருத்தியை நோக்கி முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கத்தின் செயற்றிட்டங்கள் தொடர்பில் சரியான தகவல்கள் நாட்டு மக்களை சென்றடைவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் குறுகிய அரசியல் மற்றும் வர்த்தக நோக்கங்களுடன் உண்மையை மறைத்து பொய்யான விடயங்களை மேலோங்கச் செய்வதற்கு முயற்சிப்பதே இதற்கான முக்கிய காரணம் என்றும், நாட்டில் சகல துறை சார்ந்தவர்களும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தாம் பெற்றுக்கொண்டுள்ள சுதந்திரம் பற்றிய சரியான புரிந்துணர்வுடன் செயற்படவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு