வலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள காணியை ஒப்படைக்கக் கோரிக்கை

யாழ். குருநகர் வலைத் தொழிற்சாலைக்குப் அருகாமையில் கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை கடற்றொழில் சம்மேளனத்திடம் ஒப்படைக்குமாறு யாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (21) யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பொன்னம்பலம் தயானந்தன் தலைமையில் காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகிய இந்த கூட்டத்தில் காணி விடயம் தொடர்பாக ஆராயப்பட்ட போது, குருநகர் வலைத் தொழிற்சாலை (சீனோர்) பகுதியிலுள்ள காணியில் கடற்படையினர் முகாமிட்டு இருக்கின்றனர். அந்தக்காணியில் கடற்றொழிலாளர் எரிபொருள் நிரப்பும் தாங்கி உள்ளது. அந்த காணியை கடற்படையினரிடம் இருந்து விடுவிக்குமாறு குருநகர் கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரினால் கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கடந்த காலங்களில் கடற்றொழில் சமாசத்தின் கட்டிடம் அந்த காணியில் அமைந்திருந்ததாகவும், அந்தக்காணியில் எரிபொருள் நிரப்பு தாங்கி இருப்பதாகவும் சம்மேளனத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அதன்பிரகாரம், கடற்படையினர் முகாமிட்டுள்ள அந்த காணி கடற்றொழில் சம்மேளனத்திற்கு சொந்தமான காணி என்றும், குருநகர் மீனவர்கள், யாழ். நகரப்பகுதிக்கு வந்து எரிபொருள் நிரப்புவதனால் சிரமத்தினை எதிர்கொள்வதுடன், பண விரயமும் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டிய போது, கடற்படையினர் முகாமிட்டுள்ள அந்த காணியினை உடனடியாக விடுவிக்க யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு