காணிகள் கையகப்படுத்தப்பட்டால் எமது மக்கள் எங்கே போவது? – டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கேள்வி

பாதுகாப்புத் தரப்பினர் ஒருபுறம், வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஒருபுறம், தொல்பொருள் திணைக்களத்தினர் ஒருபுறம், வனவளத் திணைக்களத்தினர் ஒருபுறம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினர் ஒருபுறம் என அனைத்துத் தரப்பினரும் காணிகளை கையகப்படுத்திக் கொண்டால், எமது மக்கள் வாழ்வது எங்கே? வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வது எங்கே? எனக் கேட்க விரும்புவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய சூழல் சட்டத்தின் கீழான 07 கட்டளைகள் தொடர்பில் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளதுடன், கடந்த கால யுத்தம் காரணமாக மிக அதிகளவில் பாதிக்கப்பட்ட மக்களான முல்லைத்தீவு மாவட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் குடியிருக்க வீடுகள் இன்றி இருக்கின்ற நிலையில், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தினை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் முறிகண்டி, மாங்குளம் பகுதிகளில் ஒதுங்கியிருந்த அரச காணியில் அத்திவாரமிட்டு, கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவிருந்த நிலையில், வனவளத் திணைக்களத்தினர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அங்கே பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை மிகவும் மோசமான முறையில் நடத்தியிருக்கின்றனர். இவ்வாறு எமது மக்களது காணிகள் உட்பட பெரும்பாலான காணிகளை வனவளத் திணைக்களத்தினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கையகப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

1983ஆம் ஆண்டு தென் பகுதியில் ஏற்பட்டிருந்த இனக் கலவரங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென கிளிநொச்சி மாவட்டத்தில், பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்டு ஜெயபுரம் எனும் கிராமம் உருவாக்டகப்பட்டு, இங்கு குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களுக்கென தேவன்குளத்தின் கீழ் 548 ஏக்கர் வயல் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த கால யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த மேற்படி வயல் நிலத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கென தற்போது அங்கு குடியிருக்கின்ற சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்தோர் 2010ஆம் ஆண்டிலிருந்து முயற்சித்து வருகின்ற போதிலும் வனவளத் திணைக்களத்தினர் அதற்கு தடையாக இருந்து வருகின்றனர்.

நான் இங்கு குறிப்பிடுவது ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. இதைப் போன்று வனவளத் திணைக்களத்தின் கெடுபிடிகள், தடைகள் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான எமது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வாழ வேண்டியநிலை ஏற்பட்டிருப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு