தொடரும் சீரற்ற காலநிலையானது நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்றும் (24) அதிக மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.
மேலும் மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களிலும் மழை அல்லது காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100-150 மில்லி மீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவுவதுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதனால், மீனவர்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.