முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாண சபையின் ஏற்பாடு

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்துக்கான அனைத்து ஏற்பாட்டையும், செலவுகளையும் வடமாகாண சபையே செய்ததாக அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 123ஆவது அமர்வு இன்று கைதடியிலுள்ள மாகாண பேரவை செயலக கட்டிடத்தில் நடைபெற்ற போது, எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா முள்ளிவாய்க்கால் நினைவு தின செலவுகளுக்கென மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளத்தில் பெறப்பட்ட தனது பங்கான 7,000 ரூபா பணத்தை திருப்பத் தருமாறு கோரியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் போதே அவைத்தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில், பந்தல் போட்டது, கதிரை போட்டது, பந்தங்களில் எண்ணெய் தோய்த்தது, பந்தங்களை நாட்டியதென அனைத்து செலவுகளும் ஒழுங்கமைப்பும் வடமாகாண சபையே செய்தது. முதலமைச்சர் தீப்பந்தம் எடுத்துத்கொடுக்க, பிரதான சுடரை ஏற்றிய சிறுமியை நினைவேந்தல் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு அழைத்தமையும் மாகாண சபையே எனத் தெரிவித்தார்.

நினைவேந்தல் நாள் அன்று காலை 10.00 மணிவரை மாகாண சபையே நிகழ்வை ஒழுங்கமைத்தது. ஆனால் திடீரென வந்த சிலர் மைக்கை பறித்து நிகழ்வை தாம் நடத்த தொடங்கியதாகவும், அந்த நேரத்தில் நாம் பயந்து ஒதுங்கவில்லை. அது ஒரு புனிதமான நிகழ்வு. அதில் குழப்பங்கள் ஏற்படாது நிகழ்வு நடந்து முடிய வேண்டும் என்பதனால் ஒதுங்கி நின்றதாகவும் தெரிவித்தார்.

இதற்கு மேலும் பல விடயங்களை சொல்லலாம். ஆனால் அந்த புனித நிகழ்வை பற்றி இங்கே கதைத்து அதனை விவாதத்துக்கு கொண்டுவர விரும்பாத காரணத்தால் அதனை அத்துடன் விடுவதாகவும் அவைத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு