இவ்வருடத்திற்குள் 2,500 வீடுகள்

அடுத்த வருடம் டிசம்பர் மாதம் முடிவதற்கு முன்பதாக நாடு முழுவதும் 2,500 மாதிரிக் கிராம வீட்டுத் திட்டங்களை செய்து முடிப்பேன் என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 75ஆவது மாதிரிக் கிராமமான ‘முல்லை நகர்’ வீடமைப்புத் திட்ட திறப்பு விழா நிகழ்வில் நேற்றுக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த வீட்டுத் திட்டம் திறக்கப்பட்டது போன்று இலங்கை பூராகவும் இன்னும் 753 மாதிரிக் கிராமங்கள் திறப்பு விழா காண உள்ளதாகவும், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவதற்கு முன்பதாக இலங்கை முழுவதும் 2,500 மாதிரிக் கிராம வீட்டுத் திட்டங்களை செய்து முடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முடிவதற்கு முன்பதாக மட்டக்களப்பு மாவட்டத்தில், 200 மாதிரிக் கிராமங்கள் அமைக்கும் வாய்ப்பை வழங்கவுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டுப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக காணப்படுவதை தான் அறிவேன் எனவும், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் வீட்டுப் பிரச்சினைகளை எவ்வகையிலாவது தீர்த்து வைப்பேன் என்ற வாக்குறுதியை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு