ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

தமிழ் மொழிமூல தேசிய பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல், நேற்று (07) கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற போது, அதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அண்மையில் மேல் மாகாணத்திலுள்ள தமிழ் மொழிமூல பாடசாலை அதிபர்களுடனான கலந்துரையாடல் ஒன்று தனது தலைமையில் இடம்பெற்றபோது அதிபர்கள் பாடசாலையில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தனது கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும், குறிப்பாக ஆசிரியர்களின் குறைபாடு தொடர்பாகவே அதிகமாக கலந்துரையாடப்பட்டதன் ஒரு கட்டமாகவே மேற்குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடுவதற்கு தீர்மானித்ததாகவும் குறிப்பிட்டார்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலமாக தமிழ் மொழிமூல தேசிய பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியுமென எதிர்பார்ப்பதாகவும், ஒரு சில தமிழ் மொழி பாடசாலைகளில் பெரும்பான்மை மொழி பேசுகின்றவர்களை வகுப்பாசிரியர்களாக நியமித்திருப்பதன் காரணமாக பெற்றோர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதனால், இந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதன் காரணமாக தேசிய பாடசாலைகளில் கடமையில் இருக்கின்ற அதிபர்களை அமைச்சுக்கு அழைத்து, எதிர்வரும் 21ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றை நடத்த எற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கலந்துரையாடலின் போது பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடி தகவல்களை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு