20ஆவது திருத்தம் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் கருத்து

அரசமைப்பின் 20ஆவது திருத்தம், ஜே.வி.பியின் பிரிவினைவாத விஷப் போத்தலென தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பு, புறக்கோட்டையிலுள்ள முன்னணியின் தலைமையகத்தில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில், நாட்டு அரசமைப்பில், பிரிவினைவாதிகளுக்கு ஏற்றவகையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தைக் கொண்டவர்களே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோல்வியடையச் செய்தனர் என்றும், சமஷ்டிக் கட்டமைப்பை, இலங்கையிலும் ஏற்படுத்த வேண்டுமென்பதே இவர்களின் பிரதான இலக்கென்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதற்காகவே, நாடாளுமன்றத்திலும் வெளியிலும், இதற்கான முனைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும், ஆனால், மகா சங்கத்தினரும் நாட்டு மக்களும் காண்பித்த கடுமையான எதிர்ப்புக் காரணமாக, அந்த முயற்சிகள் பிற்போடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

அந்த முயற்சி தோல்வியடைந்ததன் காரணமாகத்தான், பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் மத்தியில் கடும் வெறுப்பை, கடந்த மூன்று வருடங்களில் தேடிக்கொண்டதாகவும், பிரிவினைவாதிகளைச் சந்தோஷப்படுத்துவதற்கான அவர்களின் முயற்சி, இன்னும் தோல்வியடையவில்லை என்றும் தெரிவித்தார்.

ஜே.வி.பியினர், தனிநபர் பிரேரணையாக, 20ஆவது திருத்தத்தைச் சமர்ப்பித்து, சகல தரப்புகளின் ஆதரவையும் பெற்றுக்கொள்வதற்கு முயல்வதாகவும், அதன் மூலமாக, பிரிவினைவாதிகளின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமென்று, 20ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலொன்றில் வெற்றிகொள்ள முடியாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், பிரிவினைவாதத்துக்கு கொடியசைக்கும் கூட்டமைப்பு உறுப்பினர்களும் மாத்திரமே, அதற்கு ஆதரவளிப்பர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு