தபால் சேவையாளர்களுக்கான அறிவிப்பு

இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்காத தபால் சேவையாளர்கள், சேவையிலிருந்து விலகியவர்களாக கருதப்படுவார்களென தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அனைத்து பணியாளர்களதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்படுவதாகவும், இதற்கமைய சேவைக்கு சமூகமளிக்காத தற்காலிக, பணிசாரா, பதில் மற்றும் நிரந்தரமற்ற சேவையாளர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பில் நிர்வாகம் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடளாவிய ரீதியாகவுள்ள தபால் அலுவலங்களின் கடமைகளை மேற்கொள்ள தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு அந்தந்த தபாலகங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக அந்தந்த பகுதியிலுள்ள பொலிசாரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்றும், அது குறித்து பொலிஸ்மா அதிபரை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தபால் தொழிற்சங்க முன்னணியின் பணிப்புறக்கணிப்பு இன்று 9ஆவது நாளாகவும் தொடர்வதாக அந்த முன்னணியின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

தபால் சேவையாளர்களது பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடளாவிய ரீதியாக தபால் பரிமாற்று சேவை ஸ்தம்பித்துள்ளதாகவும், மத்திய தபால் பரிமாற்றகம் உட்பட நாடளாவிய ரீதியாக உள்ள தபாலகங்களில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு