மக்களை கூட்டமைப்பு ஒருபோதும் ஏமாற்றாது!

செய்திகள்

மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் ஏமாற்றாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

மேலும் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் நிலங்களை அபகரிப்பதை கண்டித்து, (செவ்வாய்கிழமை) முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த “மகாவலி அபிவிருத்தி திட்டத்தினுாடாக ஆக்கிரமிக்கப்படுகின்ற இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் 1984 ஆம் ஆண்டு விரட்டி அடிக்கப்பட்டு வித்தியானந்தா கல்லூரியில் வந்தபோது அன்றில் இருந்து இன்று வரை இந்த மக்களுடன் நாங்கள் இரத்த உறவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறு பூர்வீகமாக வாழ்ந்த மண்ணை அபிவிருத்தி என்பது மக்களுக்கு நல்ல வாழ்வாதாரங்களை கொடுக்கவேண்டுமே தவிர மக்களுக்கு வலியாக மிகவும் மகா பெரிய வலியாக அமைந்த இந்த திட்டம் எதிர்க்கப்படவேண்டியது.

இவ்வாறான ஆக்கிரமிப்பு எங்களுக்கு தேவையில்லை. நில விடுவிப்பிற்காகத்தான் எவ்வளவோ உயிர்களை சொத்துக்களை இழந்துள்ளோம்.

எனவே இந்த திட்டம் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு அரசிற்கு குரல் கொடுத்து திட்டத்தினை நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவோம்.

கூட்டமைப்பு எந்த ஒரு வேளையிலும் மக்களை ஏமாற்றாது. மக்களை பிழையான வழிக்கு திசைதிருப்பாது, மக்களின் நின்மதியான வாழ்விற்கு எப்போதும் குரல் கொடுக்கும்“ என கூறியுள்ளார்.