14வது ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
இந்த போட்டிகள் இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டித் தொடரில் 6 நாடுகள் பங்குபற்றுகின்றன.
இந்த ஆறு நாடுகளும் இரண்டு பிரிவுகளாக விளையாடவுள்ளன.
‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாடவேண்டும்.
‘லீக் போட்டிகளின் நிறைவில் இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த ‘சூப்பர் 4’ சுற்றில் 4 அணிகளும் தலா 1 முறை விளையாடவுள்ளன.
இதன் இறுதியில் முதல் 2 இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன.
இன்று ஆரம்பமாகின்ற ‘லீக்’ போட்டிகள் 20 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், ‘சூப்பர் 4’ சுற்று போட்டிகள் 21ஆம் திகதி ஆரம்பமாகி 26ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன.
அத்துடன், இறுதிப்போட்டி 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இன்றைய முதல் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடவுள்ளன.
ஆசிய கிண்ணத்தை இந்தியா 6 தடவைகளும், இலங்கை 5 தடவைகளும், பாகிஸ்தான் 2 தடவைகளும் வெற்றிகொண்டுள்ளன.
ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண போட்டிகள் கடந்த 1984-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.