வடக்கில் இந்திய – இலங்கை நட்புறவு மையம்

இந்திய – இலங்கை நட்புறவு மையம் ஒன்றை வடமாகாணத்தில் நிறுவுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, பளை பகுதியில் சுமார் 100 ஏக்கர் காணியில் 300 கோடி இந்திய ரூபாவில் குறித்த இந்திய – இலங்கை நட்புறவு மையம் அமைய உள்ளதாக அந்த மையத்தின் நடவடிக்கை பணிப்பாளர் பி.ஜெயரத்தினம் தெரிவித்துள்ளார்.

இந்திய – இலங்கை நட்புறவு மையம் தொடர்பாக நேற்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்ததுடன், தமிழகம் நாகை மாவட்ட மக்கள் இணைந்து நாகை மாவட்ட மக்கள் மன்றம் ஒன்றை உருவாக்கியுள்ள அதேவேளை, யாழ்ப்பாணத்தில் ´யாழ்ப்பாண ஆதீனம்´ என்ற தொண்டு அமைப்பை நாங்கள் பதிவு செய்துள்ளோம்.

இந்த இரு அமைப்புக்களும் இணைந்தே இந்திய – இலங்கை நட்புறவு மையத்தை உருவாக்கவுள்ளதாகவும், இதற்காக நாகை மாவட்ட மக்கள் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் தமிழகம் முழுவதும் 500 உண்டியல்கள் வைக்கப்பட்டு நிதி சேகரிக்கப்படுகின்றது.

மேலும் நாகை மாவட்ட மக்களால் வழங்கப்பட்ட ஐம்பொன்னால் செய்யப்பட்ட வள்ளி தெய்வானை சமேத முருகபெருமானின் சிலை தமிழகம் எங்கும் பவனி கொண்டு செல்லப்பட்டு நிதி சேகரிக்கப்படுவதுடன் இறுதியாக இலங்கையில் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அமையவுள்ள நட்புறவு மையத்தில் இந்திய மக்களால் நிறுவப்படும் சர்வதேச இந்து ஆலயம் ஒன்று நிறுவப்படுவதுடன் இந்திய மற்றும் புலம்பெயர் மக்கள் தங்குவதற்கான 60 வீடுகள் இந்த நட்புறவு மையத்தினுள் அமைக்கப்படும் என்பதுடன், நூலகம், அன்னதான மண்டபம், யோகாசன பயிற்சிக் கூடம், கலையரங்கம், மருத்துவ முகாம், நீராடல் தடாகம் போன்றன அமையவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த இந்திய – இலங்கை நட்புறவு மையத்தின் ஊடாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள், விதவை பெண்களுக்கான வாழ்வாதார உதவிகள், மற்றும் சிறுவர், முதியோர் காப்பகம் போன்றனவும் மேற்கொள்ளப்படவுள்ளன. இதேபோல் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சுமார் 3000 பசுக்களை வளர்க்கும் திட்டமும் மேற்கொள்ளப்படும். மேலும் சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு, கடற்றொழிலாளர்களுக்கான உதவிகள் போன்றனவும் வழங்கப்படவுள்ளது என்றும், தமிழகம் காரைக்கால், வாஞ்சியூர் பட்டணத்தில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு படகு சேவை ஒன்றை தொடங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு