வடக்கு மாகாணக் கல்வி அதிகாரிகள் ஆளுநரை சந்திப்பு

நிர்வாக நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மக்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொள்வது தொடர்பிலான விசேட கூட்டங்கள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இடம்பெற்றுவருகின்றது.
 
வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் முடிவடைந்த நிலையில் இந்த நடவடிக்கை ஆளுநரினால் மேற்கொள்ளப்படுகின்றது.
 
நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் அலுவலகத்தில் நேற்று வடமாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் செயலாளர்களை ஆளுநர் சந்தித்து கலந்துரையாடினார்.
 
இந்த சந்திப்பின்போது கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளில் முடிவடைந்த பணிகள் , இதுவரையில் நிறைவுசெய்யப்படாத பணிகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
 
வடமாகாணத்தில் சில பாடசாலைகளில் மாணவர்கள் குறைவாக இருக்கின்றபோதும் ஆசிரியர்கள் அதிகமாக இருக்கின்ற நிலை காணப்படுவதாகவும் இது நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை எடுத்துக்காட்டுவதாகவும் சுட்டிக்காட்டினார்.இது தொடர்பில் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றும் , கஷ்டப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான முன்னேற்பாடுகளை எதிர்வரும் வாரங்களில் மேற்கொள்ளவுள்ளதாகவம் ஆளுநர் தெரிவித்தார்.
 
இதற்காக அனைத்து கல்விப் பணிப்பாளர்கள் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் செயலாளர்களையும் ஒத்துழைக்குமாறு இதன்போது ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
 
வடமாகாணத்தில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக வேண்டிய அனைத்தையும் செய்வதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அதற்கு மத்திய அரசின் உதவியை பெறுவதற்கு முயல்வதாகவும், எனவே இந்த நடவடிக்கைகளில் அதிகாரிகள் தமது முழு ஈடுபாட்டையும் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
 
குறுகிய காலத்தில் பாரிய வேலைகளைச் செய்யக் கூடிய வகையில் அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்குமாறு ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார்.
 
இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் பிரத்தியேக செயலாளர் ஜே.எம்.சோமஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு