தமிழரசுக் கட்சி ஈ.பி.டி.பியுடன் இணைந்து செயற்படுகிறது – த.தே.ம.மு குற்றச்சாட்டு (Video)

சிறப்புச் செய்திகள் செய்திகள் வீடியோ செய்திகள்

தமிழ் மக்களின் தேசிய கொள்கையுடன் செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தமிழரசு கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனை தடுக்க தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாள் சந்திப்பின் போது, கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் தேசிய கொள்கைக்காக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார். அவரின் கொள்கைகளை அகற்றுவதற்கு தமிழரசு கட்சி ஈ.பி.டி.பி மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாகவம்; குற்றஞ்சாட்டியுள்ளார். வடமாகாண முதலமைச்சரின் கொள்கைகளை தோற்கடிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன், மாவை சேனாதிராஜாவின் அடிவருடிகள் சிலரும் மாகாண சபையில் குழப்பத்தினை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு, வெளிவான தேசிய நலன்களை மையப்படுத்தி செயற்பட ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு துரோகியாக காணப்பட்டார். திருடர்களை காப்பாற்றுவதற்கு தமிழரசு கட்சி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. திருடர்களின் குகையாக தமிழரசுக் கட்சி மாறியுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கொள்கைப்பற்று பாதையை தோற்கடிப்பதற்காக ஈ.பி.டி.பி மற்றும் அரசாங்கம் மற்றும் தமிழ் இனத்தினைக் காட்டிக் கொடுத்த தரப்பினருடன் இணைந்து கொண்டுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் துணை போகவில்லை.

முதலமைச்சருக்கு எதிரான இந்த சதிக்குப் பின்னால், அரசாங்கம் துணை நிற்கின்றது. 03 வாரத்திற்கு முன்னர் பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகா வடமாகாண முதலமைச்சரின் பதவிக்காலம் மிகவிரைவில் நிறைவடையுமென தெரிவித்திருந்தினையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓற்றையாட்சிக்குள் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு செயற்படும் அரசாங்கத்துடன் இணைந்து தமிழரசுக் கட்சி செயற்படுகின்றது என்பதனை எமது மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். தந்தை செல்வாவின் கோரிக்கைகளை அழிப்பதற்கு தமிழரசுக் கட்சி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. மாகாண சபையில் இடம்பெற்ற அனைத்து விடயங்களும் வெறுமனவே ஊழல் சம்பந்தப்பட்ட விடயங்கள் அல்ல. இவை அனைத்தும் தமிழ் மக்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விடயம் என்பதனை எமது மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். தமிழ் தேசத்தின் வாழ்வா? சாவா? என்ற இந்த நிலையில் தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும். வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான சதியை முறியடிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும். தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஒன்றினைந்து செயற்படுமென்பதுடன், தமிழ் மக்கள் பேரவையின் முடிவுகளுக்கு அப்பால், தமிழ் மக்கள் இந்த சதியினை முறியடிக்க அனைவரும் அணிதிரள வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.