டெங்கு மரணங்கள் அதிகரிப்பு

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 15 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், அதனால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையும் 310 ஆக உயர்ந்துள்ளதாக அரசு டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார துறையினரால் பாரிய அச்சுறுத்தல் என கருதப்படும் டெங்கு நோயை பரப்பும் நுளம்புகளுக்கு எதிரான போராட்டம் பல்வேறு வகையில் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் மே மாதம் தொடக்கம் நோயாளர்களின் எண்ணிக்கையிலும் மரணங்களிலும் அதிகரிப்பை காண முடிவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் 12,498 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். மே மாதம் தொடக்கம் ஜுலை வரையிலான தரவுகளை மையப்படுத்திப் பார்க்கும் போது மூன்று மாதங்கள் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிவதாகவும், மே மாதத்தில் 15,886 பேரும், ஜுன் மாதத்தில் 24,978 பேரும், ஜுலை மாதத்தில் 29,055 பேரும், புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக அரசு டெங்கு கட்டுப்பாட்டு பிரிவில் அறிக்கையிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் கூடுதலான நோயாளர்கள் இம்மாதத்தில் இனங்காணப்பட்டிருந்தாலும் முதலாம் வாரத்தில் 9322 என காணப்பட்ட எண்ணிக்கை நான்காம் வாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாராந்தம் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி பல்வேறு தரப்புடன் இணைந்து தங்களால் முன்னெடுக்கப்படுகின்ற டெங்கு ஓழிப்பு செயற்திட்டத்தின் முன்னேற்றத்தை காட்டுவதாக சுகாதார துறையினரால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த ஆண்டில் இதுவரையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்கள் மற்றும் மரணங்களை கடந்த வருடத்துடன் ஓப்பிடும் போது இதுவரையில் இரு மடங்கு கடந்துவிட்டதாகவே பதிவுகள் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, 2016ஆம் ஆண்டு இனங்காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 55,150 பேர் என்பதுடன், 97 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு