மூப்படைந்த பட்டதாரிகளும் அரசதுறை நியமனங்களில் உள்வாங்கப்படுவர் – கிழக்கு முதல்வர்

கிழக்கு மாகாணத்தில் 45 வயதுவரை மூப்படைந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கும் அரச துறைகளில் நியமனம் வழங்குவதற்கு, மாகாண ஆளுநர் இணங்கியுள்ளதாக முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுக்கும் இடையில் நேற்று ஆளுநர் இல்லத்தில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. குறித்த பேச்சுவார்த்தையில், கிழக்கு மாகாணத்தில் கடந்தகால யுத்தம் காரணமாக காலம்தாழ்த்தி தமது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் இவர்களுக்கான நியமன வயதெல்லையை 45 வரை அனுமதிக்க ஆளுநர் இணங்கிக் கொண்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மிக நீண்டநேரம் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தில் 40 வயதைக் கடந்து தமது பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து, தொழிலின்றி இருக்கும் சுமார் 70இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் அக்கறை செலுத்தியிருந்தார்.

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்காக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால், போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவுள்ளது. இதற்காக 40 வயது வரையான பட்டதாரிகளுக்கு மட்டுமே நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச்சேவை ஆணைக்குழு, மற்றும் மாகாண கல்வி அமைச்சுக்கு ஆளுநர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இருந்த போதிலும், முதலமைச்சர் ஆளுநருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து, 45 வயது வரையான வேலையற்ற பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் மாகாண கல்வி அமைச்சுக்கு அறிவிக்கவுள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு