இனங்களிடையே விரிசல்களை ஏற்படுத்த முன்னாள் ஆட்சியாளர்கள் முயற்சி – சரத்

முன்னாள் ஜனாதிபதியும் அவரது கட்சியை சேர்ந்தவர்களும் சிங்கள, பௌத்த மக்களிடம், ஏனைய இன மக்கள் தொடர்பிலான தவறான பிரசாரங்களை மேற்கொண்டு, இனங்களிடையே விரிசல்களையும் வன்முறைகளையும் ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக் காரியாலயத்தினை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன், கடந்த காலத்தில் இருந்த அரசாங்கம் சரியான வழியில் செல்லாத காரணத்தினாலேயே, தான் புதிய கட்சியொன்றை ஆரம்பித்து அதன்மூலம் மக்களுக்கு உண்மையான நிலையினை வெளிப்படுத்தும் வகையில் செயற்பட்டு வந்ததாகவும், மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் சுதந்திரமாக செயற்பட முடியாமல் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி அதிகாரத்தினை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் புதிய ஆட்சியை ஏற்படுத்துவற்கான முனைப்புகளை 2015ம் ஆண்டு மேற்கொண்டு வெற்றியடைந்ததாகவும், பிரதான கட்சிகளுடன் போட்டியிட்டு புதிய கட்சியொன்றை கொண்டு செல்ல முடியாது என்பதைத் தான் நன்கு அறிவேன் என்றும், ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இணைந்து ஒரு தேசிய ஆட்சி உருவாக்கப்பட்டு அனைவரும் இணைந்து ஆட்சியை நடாத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் வட, கிழக்கில் உள்ள மக்கள் ஒரு அச்ச சூழ்நிலையிலேயே இருந்து வந்த நிலையில், மூன்று இன மக்களுக்கும் பழிவாங்கப்பட்ட போதிலும், அந்த நிலை இன்று மாற்றப்பட்டு, அனைத்து இன மக்களும் ஒன்றாக ஒரு குடும்பம் போல் வாழும் நிலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை சிங்கள மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் சிறுபான்மை சமூகங்களும் அனுபவிக்க வேண்டும் என்பதை இந்த அரசாங்கம் நோக்காக கொண்டு செயற்படுவதாகவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா, இந்த நாட்டில் எதிர்காலத்தில் பிரிவினைகள் ஏற்படாத வகையிலான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன் கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து மதங்களும் ஒன்றாக கணிக்கப்படும் நிலை உருவாக்கப்படும். முன்னைய காலங்கள் இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். எதிர்காலத்தில் நாம் இலங்கையர் என்று ஒரே குடையின் கீழ் வாழ்வதற்கான சந்தர்ப்பம் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையிலான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருவதன்மூலம் மதவாதம், இன வாதங்கள் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படாது எனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு