தொடரை வெற்றிகொண்டது இந்தியா

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

கொழும்பில் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்ததைத் தொடர்ந்து, களமிறங்கிய அந்த அணியின் ஆரம்ப வீரர்களான தவான் 35 ஓட்டங்களையும் லோகேஸ் ராகுல் 57 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் வெளியேறிய போதிலும், அடுத்ததாக வந்த புஜாரா அதிரடியாக ஆடி 133 ஓட்டங்களை குவித்தார்.

மறுபுறம் விராட் கோலி 13 ஓட்டங்களுடன் வெளியேறி இரசிகர்களுக்கு ஏமாற்றமளித்த போதும், ரஹானே 132 ஓட்டங்களை விளாசினார். இதற்கமைய, 622 ஓட்டங்களுக்கு 09 விக்கெட்டுக்களை இழந்திருந்த வேளை, இந்திய அணி ஆட்டத்தை இடைநிறுத்தி, இலங்கைக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பளித்தது.

எனினும், இலங்கை அணி சார்பில் களமிறங்கிய திமுத் கருணாரத்ன 25 ஓட்டங்களையும், உப்புல் தரங்க ஓட்டம் எதுவும் பெறாத நிலையிலும், குஷல் மென்டிஸ் 24 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 10 ஓட்டங்களுடனும், மெத்தியூஸ் 26 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து வெளியேறி இரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். எனினும், ஓரளவு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிரோஷன் திக்வெல்ல 51 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பின்னால் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேற, 183 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் அந்த அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இலங்கைக்கு எதிராக அபாரமாக பந்து வீசிய அஸ்வின் 05 விக்கெட்டுக்களை சாய்த்த நிலையில், மீண்டும் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு இலங்கைக்கே வழங்கப்பட்டது.

இதன்படி இம்முறை அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய திமுத் கருணாரத்ன 141 ஓட்டங்களையும், குஷல் மென்டிஸ் 110 ஓட்டங்களையும் குவித்த போதிலும், அணியின் மற்றைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் நடையைக் கட்ட போட்டியின் 4ஆம் நாளான இன்று 386 ஓட்டங்ளை மட்டுமே பெற்ற இலங்கை அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இந்திய அணி சார்ப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 05 விக்கெட்டுக்களை வீழ்த்தியமைக்கு அமைவாக, 03 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை இடம்பெற்ற 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 2-0 என தொடரை வசப்படுத்தியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு