ஜனாதிபதி, பிரதமரைச் சந்திக்கும் கடும் முயற்சியில் ரவி கருணாநாயக்க

தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை அமைச்சர் ரவி கருணாநாயக்க சந்திப்பதற்கு முயன்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது, தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியின் பின்னணியில் இருந்து செயற்படும், ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் அவர் அறிவுறுத்துவாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்து கொள்வதற்கு முன்னர், தான் வகிக்கும் சகல பதவிகளிலிருந்தும் ரவி கருணாநாயக்க, இராஜினாமா செய்யவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கையளிப்பாரெனத் தெரிவிக்கப்படுகிறது.

தான் வகிக்கும் சகல பதவிகளிலிருந்தும், ரவி கருணாநாயக்க இராஜினாமா செய்யத் தீர்மானிப்பாராயின், அதற்கு முன்னர், நாடாளுமன்றத்தில் விஷேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அமைச்சர் ரவி கருணாநாயக்கவை இராஜினாமா செய்துகொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளதாக கடந்த தினங்களில் செய்திகள் வெளியாகியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு