விடுதலைப் புலிகள் தொடர்பில் தவறான அணுகுமுறை! சிக்கலில் ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தவறான அணுகுமுறையென உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியம் அவசரமாக எடுத்த முடிவின் மூலம் அவர்களது முடிவுகள் எடுக்கும் முறைமையே கேள்விக்குள்ளாவதாகவும், எனவேதான் ஐரோப்பிய ஒன்றியம் இன்று சிக்கலில் மாட்டியிருப்பது ஒன்றும் விசித்திரமானதாகத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிய ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைநீக்கம் தொடர்பிலான தனது நிலைப்பாட்டினை மீள் உறுதி செய்திருந்ததெனத் தெரிவித்துள்ளதுடன், தமிழீழ மக்களின் தேசிய விடுதலை இயக்கமாகவும், தமிழீழ மக்களின் உண்மையான பிரதிநிதிகளென சர்வதேச சமூகத்தாலும், 2002இல் நோர்வே, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மூலம் அங்கீகாரத்தைப் பெற்றதாகவும் விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள், இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கப் பட்டியலில் இணைத்ததை ஆரம்பத்திலிருந்தே அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் ஒரு தவறான விடயமாகவே தாம் பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐரோப்பிய பொது நீதிமன்றம் 2014இல் வழங்கிய தீர்ப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத தகவல்களின் அடிப்படையில் இருந்ததையும், தகைமை வாய்ந்த ஒரு நிறுவனத்தால் முன்வைக்கப்படவில்லையெனக் கூறியதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு