சின்னையாவை நியமித்து அரசாங்கம் தவறிழைத்துள்ளது – விமல் வீரவன்ச

அமெரிக்க இராணுவத் தலைமையகத்திடமிருந்து சம்பளம் வாங்கிய சின்னையாவை இலங்கை கடற்படையின் 21ஆவது கடற்படைத் தளபதியாக நியமித்து தேசியப் பாதுகாப்பை அரசு பலிகொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சின்னையாவின் இனம் குறித்து எமக்குப் பிரச்சினை இல்லை எனவும், போர் முடிவடைந்ததும் அவர் கடற்படையிலிருந்து பதவி விலகிச்சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் அமெரிக்கத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக நான்கு வருடங்கள் பணியாற்றிதாகவும், இக்காலத்தில் அவருக்கு அமெரிக்க இராணுவத் தலைமையகத்தில் இருந்தே சம்பளம் வழங்கப்பட்டதாகவும், ஆட்சிமாற்றத்தின் பின்னர் அரசியல் பழிவாங்கலுக்குள்ளானவர் என்ற போர்வையில் சின்னையா மீண்டும் கடற்படைக்கு உள்வாங்கப்பட்டு, கிழக்குப் பிராந்தியத்துக்கான கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் தற்போது கடற்படைத் தளபதியாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள விமல் வீரவன்ச, இலங்கையின் கடல்பாதுகாப்புக்கு குறிப்பாக, திருகோணமலை துறைமுகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நாடாக விளங்கும் அமெரிக்கா, கடல் பாதுகாப்பு குறித்து விழிப்பாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அந்நாட்டுக்குத் தேவையான ஒருவரை கடற்படைத் தளபதியாக்கினால் நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு என்ன நடக்குமெனக் கேள்வியெழுப்பியுள்ளதுடன், இராணுவம், கடற்படையைச் சேர்ந்த புலனாய்வாளர்களை சிறையில் அடைத்து தேசியப் பாதுகாப்பை தினம், தினம் அரசு பலிகொடுத்து வருவதாகவும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு