யாழ். புத்தூர் மக்களுக்கு தெற்கிலிருந்து ஆதரவு

யாழ். புத்தூர் மக்கள் குடியிருப்பிற்கு அருகில் இருக்கும் மயானத்தை அகற்றக் கோரி மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 40 நாட்களையும் கடந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புத்தூர் மேற்கு கலைமதி மக்கள் மண்டபத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த போராட்டத்திற்கு தென்பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்களும், அரசியல்வாதிகளும் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை பெண்கள் விடுதலை இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் கேமமாலினி அபேரத்ன, புத்தூரில் மயானத்திற்கு எதிராக போராடும் மக்களைச் சந்தித்து அவர்களின் போராட்டத்துக்கு இயக்கத்தின் சார்பில் ஆதரவை தெரிவித்துக் கருத்துரைக்கும் போது, போர் உட்பட அனைத்து ஒடுக்குமுறைகளும் பெண்களையும் மற்றும் குழந்தைகளையுமே அதிகமாகப் பாதிக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

புத்தூர் மேற்கு கலைமதி பிரதேச குழந்தைகள் பாடசாலைக்கு 5 மீட்டர்களுக்கு அருகில் மயானம் அமைந்துள்ள அதேவேளை, குடியிருப்பு வீடுகளும் அதே தூரத்திலேயே அமைந்துள்ளதுடன், இந்த மயானத்தைச் சுற்றியுள்ள குடும்பங்கள் பல போரினால் பாதிக்கப்பட்டு தற்போது இங்கு தகரங்களால் கூரை வேயப்பட்ட சிறு குடிசைகளிலேயே வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மனித உரிமைச் செயற்பாட்டாளர் றுக்கி பெர்னான்டோ, ஏனைய செயற்பாட்டாளர்களுடன் ஆதரவை வழங்கியிருந்த அதேவேளை, பல்வேறு தரப்பினரும் யாழ். புத்தூர் மக்களுக்கு ஆதரவினை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு