சுலக்சனின் குடும்பத்திற்கான வீட்டிற்கு அடிக்கல் நாட்டல் (Photos)

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவன் சுலக்சனின் குடும்பத்தினருக்கு வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தலைமையில் சண்டிலிப்பாய், மாசியப்பிட்டியில் நடைபெற்றது.

சண்டிலிப்பாய், மாசியப்பிட்டியில் நண்பகல் 12.00 மணியளவில் வீட்டிற்கான அடிக்கல்லினை மீள்குடியேற்ற அமைச்சர் முன்னிலையில் விஜயகுமார் சுலக்ஸனின் தாயார் நாட்டினார்.

இந்நிகழ்வில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் யாழ் மாவட்ட மேலதிக (காணி) அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் உததியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ். குளப்பிட்டி பகுதியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக கலைப்பீட 3ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23) சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24) ஆகியோர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.

இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான பல்வேறு தரப்பினரும் தமது கண்டனத்தை தெரிவித்து பல்வேறு ஆர்பாட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர். குறித்த இரு மாணவர்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் மரணத்துக்கு நீதி வேண்டும் எனவும் அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான இழப்பீடுகள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி, எதிர்க்கட்சித்தலைவர், மீள்குடியேற்ற அமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரால் குறித்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடுகள் வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் எந்தவிதமான உதவிகளும் குறித்த குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் மாணவர்களின் இறப்புக்கு நீதியும் வழங்கப்பவில்லை எனவும் பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டிருந்ததுடன் அப்பிரதேச மக்களால் கண்டன ஆர்ப்பாட்டமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில், உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான சுலக்சனின் குடும்பத்தினருக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் சண்டிலிப்பாய் மாசியப்பிட்டியில் 5 லட்சம் பெறுமதியான காணி வழங்கப்பட்டுள்ளதுடன் 9.5 லட்சம் பெறுமதியான வீட்டுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இந்த வீட்டினை இராணுவத்தினரே அமைக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு