மீன்பிடித்துறை அமைச்சர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

வடமாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே நேற்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

வடமாகாணக் கடற்றொழிலாளர் சங்கங்கள், கடற்றொழிலாளர் சமாசம் ஆகியன தொடர்ச்சியாக ஆளுநரிடம் விடுத்த கோரிக்கைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், கலந்துரையாடலின் முடிவில் பல விடயங்களுக்கு உடனடித் தீர்வினைக் காண்பதற்கு மீன்பிடித்துறை அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

மண்டைதீவு, மூளாய், மாதகல், புங்குடுதீவு, தெல்லிப்பளை, ஆனைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்களுக்கான படகுகளை நிறுத்துவதற்கான இறங்குதுறைகளை அமைக்கப்படுவதுடன், மீனவர்கள் தமது படகுகளின் இயந்திரங்களுக்கான எரிபொருட்களை பெற்றுக்கொள்ள வசதியாக ஒவ்வொரு இறங்குதுறைகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைப்பதற்கு முன்பதாக உடனடியாக அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களை பவுஸர்கள் மூலம் வழங்க நடமாடும் எரிபொருள் நிலையத்தினை ஏற்படுத்துமாறு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் அதனை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

அண்மையில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தினை மீனவர்களின் 200 படகுகள் நிறுத்தி வைக்கக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும், மீன்பிடி மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் கிராமக் குளம் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் குருவில் குளம், இரணைமடு சாந்திபுரம் குளம், அழகாபுரி குளம் ஆகியன அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு