அரசிடம் சலுகைகளைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கும்மாளமிடுகிறது – பிரபா கணேசன்

புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதாக கூறிக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பும், தென்னிலங்கை தமிழ் முற்போக்குக் கூட்டணியும் பொதுத் தேர்தலின் போது தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கமைய செயற்படாமல் தமது நிலைப்பாட்டை காப்பாற்றிக் கொள்வதற்கான அரசியல் செய்வது கேவலமான விடயமென ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு 100 நாட்களுக்குள் உருவாக்கப்பட வேண்டுமென அழுத்தம் கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் தென்னிலங்கை ஐ.தே.க அடிவருடிகளாக இருக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் அதனைப் பற்றி பேசுவதில்லை எனவும், உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்றவர்கள் ஊடகங்களுக்கு தமது எதிரான கருத்துகளை தெரிவித்து விட்டு அரசாங்கத்திற்கு பாராளுமன்ற வாக்கெடுப்பின் போது ஆதரவு தெரிவித்திருப்பது கேவலமானது. என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தென்னிலங்கை தமிழ் கட்சிகளில் ஒரு சிலர் இதற்கு ஆதரவாக வாக்களித்திருப்பதன் மூலமாக தமது கூட்டணியின் நிலைப்பாட்டை மாற்றியிருப்பதாகவும், இவை அனைத்தும் ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தாளும் சூழ்ச்சிதான் காரணம் என்றும், ஜனாதிபதியின் ஊடாக இது தொடர்பாக கலந்துரையாடலின் போது நாடகமாடிய அமைச்சர்கள் அடுத்த நாள் நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படும் என்ற செய்தியினை அமைச்சர் பைசர் முஸ்தபா மூலமாக வெளியிட்டு தமது வெற்றியினை ஊடகங்களின் ஊடாக வெளிப்படுத்தியுள்ள போதிலும், அவர்களால் நடைபெறவிருக்கும் பிரதேசசபை தேர்தலிலே இவற்றை நடைமுறைப்படுத்த முடியாது. அதன் பின்பு வரும் தேர்தலில்கூட அவர்களால் இவற்றை செய்ய முடியாது என்றும், மக்கள் ஏமாற்றும் முயற்சிகளிலேயே இவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுகின்றனர் என்பதையும் தெரிவித்துள்ளார்.

தாங்கள் பொதுத்தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் படி வடகிழக்கு இணைப்பு சமஷ்டி என்ற இரண்டையுமே மறந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டு கும்மாளமிடுவதாகவும், தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி வாக்குகளைப் பெற்ற தென்னிலங்கை தலைமை ரணில் விக்கிரமசிங்கவிற்கு அடிவருடிகளாக செயற்படுவது தெளிவாகின்றது என்றும் பிரபா கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு