வடமராட்சி கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு உதவித் திட்டங்கள் முன்னெடுப்பு

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கு குடாரப்பு மற்றும் தாளையடி பகுதிகளில் வடமராட்சி கிழக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் சங்கரப்பிள்ளை திரவியராசா தலைமையில் குறித்த நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன.

சுனாமியாலும் யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள், வறிய மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள், மருதங்கேணி வைத்தியசாலை நோயாளர்களின் பாவனைக்கான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியன இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

சுவிட்சர்லாந்திலிருந்து வருகை தந்திருந்த சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய பிரதிநிதி இரா.துரைரத்தினம் விஷேட அதிதியாக கலந்து கொண்டதுடன், குடாரப்பில் நடைபெற்ற வைபவத்திற்கு வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சிவபாதம் நந்தகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த வைபவத்தில் குடாரப்பு பகுதியிலுள்ள வறிய மாணவர்கள் 13 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தாளையடியில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற வைபவத்தில் 18 பேருக்கான வாழ்வாதார உதவிகளும், யுத்தத்தினால் காலை இழந்த செல்வரஞ்சனா என்ற பெண்ணுக்கு மோட்டார் சைக்கிளும், வழங்கி வைக்கப்பட்டதுடன், மருதங்கேணி வைத்தியசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்காக இரண்டரை இலட்சம் ரூபா வைத்தியசாலை நலன்புரிச் சங்க செயலாளர் சி.பொன்னம்பலத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் உரையாற்றிய சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய பிரதிநிதி இரா.துரைரத்தினம் யுத்தத்தினாலும் சுனாமியினாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் முன்னேற்றம் ஒன்றே தமது அமைப்பின் குறிக்கோள் எனத் தெரிவித்ததுடன், கடந்த 10 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டில் இயங்கிவரும் சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் எமது பிரதேசம் எமது மக்கள் என்ற இலக்கை மட்டுமே நோக்கமாக கொண்டு செயற்பட்டு வருவதாகவும், தாம் வழங்கும் உதவிகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு