வித்தியா கொலை வழக்கு; லலித் ஜயசிங்க மீதான விசாரணைகள் நிறைவு

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக அறிவிக்கப்பட்ட சுவிஸ் குமாரை காப்பாற்ற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க தொடர்பில் அனைத்து விசாரணைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் ஆர்.சபேசன் முன்னிலையில் சந்தேகநபரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, சந்தேகநபர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அறிவித்துள்ள அதேவேளை, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜன் இதுவரையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படாமை தொடர்பிலும் மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் தாம் முக்கியமானதொரு சாட்சியை வழங்கவுள்ளதாக பொலிஸாரினூடாக நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்த சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இன்றைய தினமும் மன்றில் ஆஜராகவில்லை. மன்றில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கும்படி முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு குறித்த சாட்சியாளர் சுயவிருப்பின் அடிப்படையில் சாட்சி வழங்க முன்வந்துள்ளதால் அவருக்கு அழைப்பாணை விடுக்க தேவையில்லையென பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இரத்னபுரி பிராந்தியத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கான அறிவித்தலை அனுப்பி வைக்குமாறு பதில் நீதவான் ஆர்.சபேசன் நீதமன்ற பதிவாளருக்கு கட்டளை பிறப்பித்துள்ளதுடன், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு