40 வருடங்களாக புனரமைக்கப்படாத நிலையில் ஊரெழு மேற்குச் சங்க வீதி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வலி. கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட யாழ். ஊரெழு மேற்குச் சங்க வீதி கடந்த 40 வருட காலமாகப் புனரமைக்கப்படாமையால் பெரும் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால், இந்த வீதியால் போக்குவரத்துச் செய்யும் பல்வேறு தரப்பினரும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.

ஒரு கிலோமீற்றர் நீளமான இந்த வீதி பலாலி வீதியையும், சுன்னாகம் - புத்தூர் வீதியையும் இணைக்கும் முக்கிய கிளை வீதியாக அமைந்துள்ளது. வெயில் காலங்களில் இந்த வீதியால் வாகனங்கள் செல்லும் போது, புழுதிகள் பெருமளவில் வீடுகளுக்குள் செல்வதனால், தாமும், தமது பிள்ளைகளும் அடிக்கடி நோய்வாய்ப்பட வேண்டியுள்ளதாக இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சாதாரண மழை காலங்களில்கூட இந்த வீதியில் வெள்ளநீர் தேங்கிக் காணப்படுவதால் போக்குவரத்துச் செய்யும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீதியைப் புனரமைத்துத் தருமாறு தாம் பல்வேறு தடவைகள் வலி. கிழக்குப் பிரதேச சபையின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ள போதிலும் பிரதேச சபையினர் இதுவரை வீதியைப் புனரமைக்க எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லையெனக் குற்றஞ்சாட்டியுள்ள பொதுமக்கள், எதிர்வரும் மாரிகாலத்திற்கு முன்னர் இந்த வீதியைப் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.