தெருவோரங்களில் சிறுவர் வியாபாரிகள்

மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியிலுள்ள குருக்கள்மடம், கிரான்குளம் போன்ற பகுதிகளில் தெரு வியாபாரங்களில் சிறுவர்கள் ஈடுபடுவதைப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த வீதியால் செல்கின்ற பாதசாரிகள், பிரயாணிகள், சுற்றுலாப் பயணிகளிடம் நாகப்பழங்கள், ஈச்சம்பழங்கள் விற்பனையில் இச்சிறுவர்கள் ஈடுபடுவதாகவும், பாடசாலை நாட்களிலும் பாடசாலை நேரங்களிலும் இவ்வாறு சிறுவர்கள் வீதி ஓரங்களில் நின்று, இந்தப் பழங்களை விற்பதைக் காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீதியின் ஓரங்களில் நின்று, அவ்வழியால் செல்லும் வாகனங்கள், பிரயாணிகளை மறித்து, தமது வியாபார நடவடிக்கையை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கல்வி கற்க வேண்டிய இந்த சிறுவர்கள், வீதியில் நின்று வியாபாரம் செய்வதால் பலரும் சிறுவர்களிடம் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிறுவர்களிடம் இது தொடர்பாக வினவிய போது, குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டு நாங்கள் இந்த வியாபாரத்தைச் செய்து வருவதாகவும், இது ஒரு காலத்துக்கான பழங்கள் என்பதால், இந்தப் பழங்கள் எல்லாக் காலமும் மட்டக்களப்புக்கு வருவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

சிறுவர்கள், தெருக்களில் நின்று வியாபாரம் செய்வது குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, சிறுவர்களின் நலன்களுக்காக வேலை செய்யும் தொண்டர் நிறுவனங்கள் கவனம் செலுத்தி, சிறுவர்கள் பாடசாலைக்குச் சென்று கல்வி கற்கும் நிலையை உருவாக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு