தேர்தலைப் பிற்போட அவசியமில்லை – பிரதமர்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தேர்தலை பிற்போட வேண்டிய எந்தத் தேவையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பன வருவதால், அவற்றுக்கு சிரமம் ஏற்படாத வகையில் தேர்தலை ஜனவரியில் நடத்தலாம் என்பது, கட்சித் தலைவர்களின் கருத்தென நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பிரதமர் தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறைக்கு பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்துள்ளதாகவும், கடந்த கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது மாகாண சபை தேர்தல் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நவம்பரில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாலும் டிசம்பரில் சாதாரண தரப் பரீட்சை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரவுள்ளதாலும், ஜனவரியில் தேர்தலை நடத்துவதே பொருத்தமானது என்பது கட்சித் தலைவர்களின் கருத்து எனவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.