வடக்கு, கிழக்கு பட்டதாரிகளுக்கு இன விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக அதிகளவில் அதிகரித்துள்ள நிலையில், அண்மைக் காலங்களில் இவர்களது வேலைவாய்ப்புக்களைக் கோரியதான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அந்த பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக் கோரிக்கையை நிவர்த்தி செய்வதற்காக, 1990ஃ15ஆம் இலக்க சுற்றறிக்கையை மீண்டும் செயற்படுத்தி, அனைத்து அரச தொழிற்துறைகள் சார்ந்த நியமனங்களிலும் இன விகிதாசாரத்தைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா? என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார விவகாரங்கள் மற்றும் கொள்கை வகுப்பு விவகார அமைச்சர் என்றவகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (19.09.2017) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய டக்ளஸ் தேவானந்தா, தொடர்ந்து உரையாற்றுகையில், எமது நாட்டில் அரச நிறுவனங்களில் தமிழ்மொழி மூலமான கடமைப்பாடுகளை நிறைவேற்றுவதில் தமிழ்மொழி சார்ந்த புலமைகள், பரீட்சையங்களையுடைய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறைகள் காரணமாக தமிழ்மொழி மூலமான பரீட்சயங்களை மாத்திரம் கொண்ட மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பாரிய பாதிப்புகளையும், சிரமங்களையும் தொடர்ந்து எதிர்நோக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வித்துறை சார்ந்த நிர்வாக ரீதியிலான அதிகாரிகளின் தெரிவுகளின்போதும் தமிழ் மொழி மூலமான தெரிவுகள் புறக்கணிக்கப்படுகின்றதொரு நிலை ஏற்பட்டு வருவதாகவே அத்துறை சார்ந்தோரால் தொடர்ந்தும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருவதையும் அடிக்கடி ஊடகங்களின் வாயிலாக அறிந்துவரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்ச பிரேமதாஸ அவர்களது காலத்தில், இன விகிதாசாரத்தின் அடிப்படையில்; அரச உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் இடம்பெற வேண்டும் என்பது தொடர்பிலான பொது நிர்வாக அமைச்சின் 1990ஃ15ஆம் இலக்க சுற்றறிக்கை ஒன்று 25.03.1990ல் கொண்டு வரப்பட்டு, அது 1995ஆம் ஆண்டு வரையில் அமுலில் இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேற்படி 1990ஃ15ஆம் இலக்க சுற்றறிக்கையை மீண்டும் செயற்படுத்தி, அனைத்து அரச தொழிற்துறைகள் சார்ந்த நியமனங்களிலும் இன விகிதாசாரத்தைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா? என்று கேள்வி எழுப்புவதுடன், அதற்கான பதிலையும், எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பான விளக்கத்தையும் பிரதமர் வழங்குவாரென எதிர்பார்ப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்திருந்தார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு