அரசாங்கம் மக்களின் நலன்களுக்காக பொறுப்புடன் செயற்பட்டு வருகிறது – ஜனாதிபதி

இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில் அதன் உடன்படிக்கைகளுக்கு ஏற்ப, மக்களின் நலனுக்காக மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகவும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகள் படிப்படியாக முன்னேற்றமடைந்து வருவதாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹ{சைனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையர் அல் ஹ{சைன் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் நியூயோர்க்கில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது அவசரப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கடும்போக்காளர்களே இலாபமடைவதாகத் தெரிவித்துள்ளதுடன், மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றிய முன்மொழிவில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை முழுமைப்படுத்துவதற்கு இரண்டு வருட காலம் தமது நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை நேரில் கண்டறிவதற்காக அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் ஆணையாளருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆணையாளருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, இந்த அனைத்து நடவடிக்கைகளையும், நாட்டின் உள்ளக அரசியல் நிலவரங்களையும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளையும் கருத்திற்கொண்டே முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் இந்த விஜயத்திற்கு முன்னர் தான் கையொப்பமிட்டதாகவும், அதன் நடவடிக்கைகள் செயற்திறனாக முன்னெடுக்கப்படும் என்றும், புதிய அரசியலமைப்பு தொடர்பான உத்தேச வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு படையினர் வசமுள்ள கிழக்கு மாகாணத்தின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கில் உள்ள காணிகளில் குறிப்பிடத்தக்களவு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சியவை நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு முறையாக மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை பாராட்டுவதாக குறிப்பிட்ட மனித உரிமைகள் ஆணையாளர் ஹ{சைன், முன்னேற்றத்தை அடைந்து கொள்வதற்கான பயணம் மேலும் விரைவுபடுத்தப்படுமாயின் மகிழ்ச்சியடைய முடியும் என்றும் தெரிவித்ததுடன், காணாமல் போனோர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை பாராட்டிய அதேவேளை, அந்த அலுவலகத்திற்கான நியமனங்களை மேற்கொள்ளும் போது அனைத்து இனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் நியமனங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் போது இலங்கைக்கு முழுமையான உதவிகளை வழங்க ஐ.நா மனித உரிமைகள் பேரவை தயாராகவுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு