வடக்கு, கிழக்கிற்கு சமச்சீரற்ற விஷேட அதிகாரம் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் திருத்த யாப்பில் நாம் வலியுறுத்தி வந்ததன் பிரகாரம் சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாடாளுமன்றத்திற்கு மேலாக மேல் சபை என்ற ஒரு சபையும் உருவாக்குவதற்கான பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளதில், சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவம் 50இற்கு 50 என்றவாறு அமையப்பெற வேண்டுமென நாம் வலியுறுத்தியுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் தேசிய நீர்ப்பாசன வடிகாலமைப்பு சபையின் ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பாக செயலாளர் நாயகத்துடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், குறித்த ஊழியர்களது பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தறிந்து கொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களே அதிகளவு பிரதிநிதித்துவம் செய்துவரும் நிலையில் உருவாக்கப்படவுள்ள மேல் சபையிலும் அதேவிதமாக அமையுமாக இருந்தால் அந்த சபையின் உருவாக்கலுக்கான நோக்கம் அர்த்தமற்ற ஒன்றாகிவிடும் என்ற வகையில், குறித்த மேல்சபையில் சிறுபான்மையின மக்களுக்கும் சரிபாதி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்றும், பொலிஸ் மற்றும் முப்படையில் இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கிலுள்ள மக்களின் பிரச்சினை நாட்டின் ஏனைய மாகாணங்களில் இருக்கின்ற மக்களின் பிரச்சினையைவிட வேறுபட்ட வகையில் இருப்பதாகவும், அதனைச் சீர்செய்வதற்கு சமச்சீரற்ற அதிகாரம் வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளதுடன், பெண்களுக்கு சம உரிமையான அரசியல் பங்களிப்புக்கள் வழங்கப்பட வேண்டும் எனவும், மதச்சார்பற்ற நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்ற பல கருத்துக்களை தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு