வடக்கு முதல்வரிடம் இராணுவத் தளபதி விடுத்த கோரிக்கை

வடபகுதி மக்களுக்கான முன்னேற்ற செயற்பாடுகள் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்கு இராணுவத்தை பயன்படுத்துமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் தாம் தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்ததாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனக்கோ தனது படைத்தரப்பினருக்கோ எவ்வித அரசியல் நோக்கமும் கிடையாது என்றும், மக்களின் நலனை கருத்திற்கொண்டே அபிவிருத்திப் பணிகளுக்கு இராணுவத்தை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 05 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கட்டிடங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டதாகவும், இவை மக்களின் நலனை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், தேசிய பாதுகாப்பையும் அத்தியாவசியத் தேவைகளையும் கருத்திற்கொண்டே நாட்டில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடக்கில் மாத்திரமின்றி தென்பகுதியின் பல பகுதிகளிலும் இவ்வாறு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் நோக்கம் மோதலில் ஈடுபடுவதல்ல. மாறாக நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதே சமயம் திடீரென ஏற்படும் அனர்த்தங்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளின் போது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதே என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்றே வடக்கிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விக்கினேஸ்வரன் தமிழர் என்றாலும் தென்பகுதி மக்களோடு நெருங்கி வாழ்ந்த ஒருவர் என்பதால், இந்த சந்தர்ப்பத்தில் அவர் எம்முடன் இணைந்து செயற்படுவாரெனத் தாம் நம்புவதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு